சுவாமி சித்பவானந்தர் (Swami Chidbhavanandar)
சுவாமி சித்பவானந்தர் (11.03.1898 - 16.11.1985) ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சரின் நேரடிச்சீடரான சுவாமி சிவானந்தரால் தீட்சை கொடுக்கப்பட்டவர். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் மற்றும் பல்வேறு கல்வி ஸ்தாபனங்களை நிறுவியவர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள். பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டை பாளையத்தில் பெரியண்ண கவுண்டர் நஞ்சம்மை தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர்.இயற்ப்பெயர் சின்னு கவுண்டர்.
சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை’ நிறுவினார். உபநிஷதங்கள், பகவத்கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றுக்கு அற்புதமான விரிவுரைகளையும், அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் சுவாமிகள் எழுதியுள்ளார். ஏராளமானோர் நல்வழியிலும் ஆன்மீக வாழ்விலும் மேம்பாடு அடைய ‘அந்தர்யோகம்’ எனும் சிறப்பான பயிற்சியை அறிமுகம் செய்தார்.
1956ல் சேலத்தில் ‘ஸ்ரீ சாரதா சமிதி’ என்ற துறவு ஸ்தாபனத்தை உருவாக்கினார். இது, பின்னாளில் கரூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில், சித்பவானந்தரின் போதனைகளை பின்பற்றி, 60 பள்ளிகளும், ஏழு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன.
ஆன்மிகப் பணிகள், சொற்பொழிவுகள், கல்வி நிலையங்கள் அமைத்தல், சமூக சேவை இவற்றோடு தலைசிறந்த படைப்பாளியாகவும் மலர்ந்தார். ‘தர்ம சக்கரம்’ என்ற மாத இதழை 1951-ல் தொடங்கினார். இதிகாசங்கள், வேதாந்த நூல்கள், பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர் கதைகள், நாடகம், தத்துவ விளக்கம், உரைநடை என 130-க் கும் அதிகமான நூல்களைப் படைத்துள்ளார்.
70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் செய்திகளைத் தமிழகத்தில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவரும் ‘பராய்த்துறை மேவிய பரமபுருஷர்’ எனப் போற்றப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர் 87-வது வயதில் (1985) மகாசமாதி அடைந்தார்.
பிகு: இந்திய பசுமை புரட்சியின் தந்தை என்றழைக்கப்பட்ட முன்னாள் மாநில/ மத்திய அமைச்சர் /ஆளுநர் சி.சுப்பிரமணியம் அவர்களின் சிறிய தந்தை சுவாமி அவர்கள்.
No comments:
Post a Comment
--oo--