அய்யாமுத்து அவர்கள் 1898'ல் ஆண்டு கோவை மாவட்டம் பரஞ்சேர்வழி எனும் கிராமத்தில் அங்கண்ண கவுண்டர், மாராக்காள் தம்பதியரின் மகனாகப் பிறந்தர்.கோவை செயிண்ட் அந்தோணியார் பள்ளியிலும், பின்னர் லண்டன் மிஷன் பள்ளியிலும் ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் கற்றுத் தேர்ந்தார். தட்டச்சுப் பயின்றார்.ஆங்கிலேயர் நடத்தி வந்த 'ஸ்பென்சர்'கம்பெனி'யில் பணியாளராகவும் இருந்தார். முதல் உலகப் போர் தொடங்கியபோது வெளிநாடு செல்ல வேண்டுமென முடிவு செய்தார். அதனால், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பும் இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனத்தில் சேர்ந்தார்.
பின்னர், 1918 ஆம் ஆண்டு இராணுவ அலுவலகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ்ரா, பாக்தாத் முதலிய நாடுகளில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1920 ஆம் ஆண்டு தமிழகம் திரும்பினார்.தேசவிடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட முடிவு செய்து, செட்டிபாளையம் சென்று, கோவை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அய்யாசாமிக் கவுண்டரை அணுகிக் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
தமது மனைவி கோவிந்தம்மாவையும் ராட்டை சுற்றச் செய்தார். கிராமப்புறங்களில் விடுதலைப் போராட்டப் பரப்புரைகளைத் தீவிரமாக மேற்கொண்டார். திருப்பூர் கதர் போர்டுக்கு நூல் நூற்று அனுப்பினார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் சேரிப்பகுதிகளுக்குச் சென்று தூய்மைப்படுத்தும் பணி செய்தார்.திருச்செங்கோடு புதுப்பாளையம் பி.கே.ரத்தின சபாபதியின் வேண்டுகோளை ஏற்று 'காந்தி ஆசிரமம்' அமைத்தார். அங்கு நூற்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கெனத் தொடக்கப்பள்ளி நிறுவப்பட்டது. அவர்களுக்குக் கல்வியுடன் மதிய உணவும் அளிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கெனத் தொடக்கப்பள்ளி நிறுவப்பட்டது. அவர்களுக்குக் கல்வியுடன் மதிய உணவும் அளிக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு ஆசிரமப் பணிகள் நிறைவு பெற்று, தந்தை பெரியார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
1932 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பிய காந்தியடிகளை, மும்பையில் சிறைபிடித்தது பிரிட்டிஷ் அரசு. அரசு அடக்குமுறையைக் கண்டித்து, கரங்களில் தேசியக் கொடி ஏந்தி புஞ்சை புளியம்பட்டித் தெருக்களில் வீரமுழக்கமிட்டுச் சென்ற கோவிந்தம்மாளை காவலர்கள் குண்டாந்தடியால் தாக்கினர். தாக்குதலுக்கு அஞ்சாமல் போராடினார். கைது செய்யப்பட்டு ஆறு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அய்யாமுத்து எழுதிய 'இன்ப சாகரன்' நாடகம் 1937 ஆம் ஆண்டு மேடை ஏறியது. 'கஞ்சன்' என்றும் திரைப்படத்துக்கு கதை, வசனம், பாட்டு, இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று வெற்றிபெறச் செய்தார் அய்யாமுத்து!
இலக்கியத்துறையிலும் மகத்தான படைப்புகளை அளித்துள்ளார். 'எனது நினைவுகள்', 'காந்தி தரிசனம்', 'ராஜாஜி என் தந்தை', 'நான் கண்ட பெரியார்' முதலிய வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.கட்டுரை, சிறுகதை, நாடகம் எனப் பல துறைகளிலும் தமது முத்திரையைப் பதித்துச் சென்று உள்ளார். 'தேய்ந்த லாடம்', 'அக்காளும் தங்கையும்' 'நாட்டுப்புறம்' முதலிய அவரது கவிதைத் தொகுப்புகள் இலக்கியத் தரம் பெற்று விளங்குபவையாகும்.
தந்தை பெரியாரின் 'குடி அரசு' இதழிலும், கதர் இயக்கத்துக்காக நடத்தப்பட்ட 'குடிநூல்' இதழிலும் பணிபுரிந்து மிகத் தேர்ந்த இதழாசிரியராகவும் திகழ்ந்தார். 'எங்கே செல்கிறோம்?' 'சுதந்திரத்துக்கு முன்னம் பின்னும்', 'சோசலிசம்', 'சுதந்திரா கட்சி ஏன்?' – முதலிய கட்டுரை நூல்களையும் தமிழுக்கு அளித்துள்ளார். மேலும் 'நச்சுப் பொய்கை', 'இராஜபக்தி , 'மேவாரின் வீழ்ச்சி', 'பிச்சைக்காரி' முதலிய நாடகங்களையும் படைத்தளித்துள்ளார்.
மேனாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டு அய்யாமுத்துவை டெல்லிக்க அழைத்து, சுதந்திர தின வெள்ளி விழாவில் தேசபக்தர்களுக்கான தாமிரப்பத்திரம் வழங்கிச் சிறப்பித்தார்.
தேச விடுதலைப் போராட்ட வீரர், சிறைக்கு அஞ்சாத சிங்கம், சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி காணாத தலைவர், நேர்மைக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும் நிறைகுடமாகத் திகழ்ந்தவர், 'அயர்வறியாத உழைப்பாளி' என மகாத்மா காந்தியடிகளால் பாராட்டப் பெற்றவர். அத்தியாகி, 21.12.1975 ஆம் நாள் இம்மண்ணை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், அவரது தேசத் தொண்டு என்றும் நிலைத்து நிற்கும்!! அவரது தியாகம் வரலாறாகும்!!
பெரியசாமி தூரன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகில் உள்ள மஞ்சக்காட்டுவலசு என்னும் சிற்றூரில் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 26 ஆம் நாள், பழனிவேலப்பர்- பாவாத்தாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் தூரன். பெற்றோர் சூட்டிய பெயர் பெரியசாமி என்பதாகும்.
கல்லூரியில் படிக்கும்பொழுது ‘தூரன்’ என்ற புனைப்பெயரை வைத்துக் கொண்டார்.தன்னுடைய இளைய பருவத்தில், தேசிய-மஹாகவி பாரதியான் பால் ஈர்க்கப்பட்டு, மஹாத்மா காந்தியினாலும் ஊக்கம் கொண்டார்.
சிறந்த தேசபக்தராக இருந்த காரணத்தால், ஆங்கிலேய அரசாங்கம் விடுதலை வீரர் பகத் சிங்கைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து, கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வைப் புறக்கணித்தார்.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது. முக்கியமாக, ஐந்து கவிதை நூல்களும், ஏழு நாடக நூல்களும், ஐந்து கதைத் தொகுதிகளும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளும், ஆறு இசை நூல்களும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும், மற்றும் பல நூல்களும் படைத்து அளித்துள்ளார்கள். உளவியல் துறையில் (Psychology) “குழந்தை உள்ளம்”, மரபணுவியல் துறையில் (Genetics) “பாரம்பரியம்”, கருத்தரித்தல் பற்றிய அறிவியல் துறையில் (Embryology) “கருவில் வளரும் குழந்தை” போன்ற அற்புத படைப்புகளும் வழங்கியுள்ளார் திரு தூரன். அவருடைய படைப்புகளில் இளந்தமிழன், மின்னல் பூ, தங்கச் சங்கிலி, பிள்ளை வரம், தேன் சிட்டு, பூவின் சிரிப்பு ஆகியவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை. பொன்னியின் தியாகம், அழகு மயக்கம் ஆகியவை அருமையாகப் படைக்கப்பட்ட நாடகங்கள். குழந்தைகளுக்காகப் பல பாடல்கள், மிருகங்கள் பற்றிய கதைகள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்கா’ ராகத்தில் அமைந்த “ஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்கா’வில் அமைந்த “கலியுக வரதன்”, ‘மாண்ட்’ ராகத்தில் அமைந்த “முரளீதரா கோபாலா”, ‘சாவேரி’யில் அமைந்த “முருகா முருகா”, ‘காபி’யில் பாடிய “பழனி நின்ற”, ‘கீரவாணி’யில் அமைந்த “புண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரி’ ராகத்தில் அமைந்த “தாயே திரிபுரசுந்தரி” ஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.
பெரியசாமி தூரன் அவர்கள் செய்துள்ள மொழியாக்கங்களில், ஜாக் லண்டன் அவர்களின் “Call of the Wild” (கானகத்தின் குரல்), நாவோமி மிட்சின்ஸனின் “Judy and Lakshmi” (காதல் கடந்த நட்பு) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை. இவர், “பாரதி தமிழ்” மற்றும் “தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்” ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியராக (Editor) இருந்து வெளியிட்டுள்ளார். மேலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த சில கவிதைகள் மற்றும் நாடகங்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மஹாகவி பாரதியாரின் பன்முகத் தோற்றத்தையும் ஆளுமையையும், அருமையான முறையில் அலசி ஆராய்ந்து, இவர் வெளிக் கொணர்ந்த பத்து தொகுதிகள், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகளில் மிகச்சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
1948-லிருந்து 1978 வரை தலைமைத் தொகுப்பாசிரியர் பொறுப்பில் கடுமையாக ஓய்வின்றி உழைத்து பத்து தொகுதிகள் கொண்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை இவர் தயாரித்தது மிகச் சீரிய பணியாகும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான ஒரு கலைக் களஞ்சியத்தையும் பத்து தொகுதிகளுடன் படைத்தார்.
1948-லிருந்து 1978 வரை தலைமைத் தொகுப்பாசிரியர் பொறுப்பில் கடுமையாக ஓய்வின்றி உழைத்து பத்து தொகுதிகள் கொண்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை இவர் தயாரித்தது மிகச் சீரிய பணியாகும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான ஒரு கலைக் களஞ்சியத்தையும் பத்து தொகுதிகளுடன் படைத்தார்.
டி.அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார்.
இந்திய அரசு இவருக்கு 1968-ல் பத்ம பூஷண் விருதளித்துக் கௌரவித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1970-ல் கலைமாமனி விருதும், 1972-ல் தமிழ் இசை சங்கம் இசைப்பேறறிஞர் பட்டமும், 1978-ல் எம்.எ.சி.அறக்கட்டளைகள் அண்ணாமலை செட்டியார் விருதும் அளித்து கௌரவித்தன. பாரதீய வித்யா பவனும், சாகித்ய அகாதமியும் இணைந்து தொண்டில் கனிந்த தூரன் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை அவருடைய நூற்றாண்டான சென்ற வருடத்தில் வெளியிட்டு கௌரவித்தன.
தூரன் 1980 முதல் நோய்வாய்ப்பட்டிருந்தார். 1987 ல் ஜனவரி 20 ஆம் நாள் மரணமடைந்தார்.
கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் (1929). கரக்பூர் ஐஐடி-யில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்காவில் உயர்கல்வி பயின்றார். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், தமிழ் இணையபல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.கணினித்தமிழ் தமிழ்நாட்டில் வேரூன்றத் தொடங்கும்போது தமிழக அரசு நாடிய குறிப்பிட்ட சில தலைவர்களில் ஒருவர்.
மத்திய அரசின் செம்மொழி அறிந்தேற்புக் குழுவில் இடம்பெற்றவர் வா.செ.குழந்தைசாமி. மருத்துவ கலைக் களஞ்சியம், கலைச்சொல் அகராதிகள் வெளிவரக் காரணமாக இருந்தவர். பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு, தேசியக் கல்வி-ஆய்வு பயிற்சிக் குழு உள்ளிட்ட பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான பொறுப்புகளை வகித்துள்ளார். "குலோத்துங்கன்' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவந்துள்ளது.
கலைச் சொல்லாக்கம், புதிய சொற்களை உருவாக்கும் உத்திகள் குறித்து பல நூல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் எழுத்துச் சீரமைப்புப் பணியை லட்சியமாக கொண்டவர். வரிவடிவச் சீரமைப்புப் பணியை கடந்த 36 ஆண்டுகளாக ஓர் இயக்கமாகவே நடத்தி வருகிறார். 247 தமிழ் ஒலி எழுத்துகளைக் குறிப்பிட அதிகபட்சம் 39 குறியீடுகளுக்கு மேல் தேவை இல்லை என்பது இவரது உறுதியான கருத்து.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980 ஆம் ஆண்டு இவரது தமிழ்த்தொண்டுகளைப் பாராட்டிக் கௌரவ முனைவர் பட்டமளித்தது.பத்மபூஷண், பத்மஸ்ரீ, சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்றிருக்கும் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.
வா.செ.குழந்தைசாமி அவர்கள் 2016 ஜனவரி டிசம்பர் 10 ஆம் நாள் சென்னையில் காலமானார்.
புலவர் செ.இராசு
புலவர் செ.இராசு அவர்கள் 02.01.1938ல் வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு (பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்) என்னும் ஊரில் பிறந்தவர்.பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். இவர்தம் மனைவியார் பெயர் கெளரி அம்மாள்.மூன்று ஆண்மக்கள் இவருக்கு வாய்த்தனர். கணிப்பொறித் துறையில் இவர்கள் பணிபுரிகின்றனர்.தொடக்கக் கல்வியை(1-5) திருப்பூர் கருவம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், வள்ளுவர் தொடக்கப்பள்ளி, ஞானிபாளையம், லண்டன் மிசன் பள்ளி (ஈரோடு) செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவுசெய்தவர் (1955-59). சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட், முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
ஈரோட்டில் தமிழாசிரியர் பணியை 1959'ல் தொடங்கி 1980-82'ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.பிறகு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1982ல் இணைந்து கல்வெட்டு,தொல்லியல் துறையில் துறைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட ஆய்வுப்பணியை மேற்கொண்டிருந்தார்.இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர், கல்வெட்டியல் கலைச்செம்மல், திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.
1959ல் தமிழாசிரியர் பணியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு,ஓலைப் பட்டயம், ஓலைச்சுவடி, இலக்கியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். பெரும்புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டரிடம் சுவடிப்பயிற்சி, பேராசிரியர் கா.ம.வேங்கடராமையாவிடம் கல்வெட்டுப் பயிற்சி, தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநர் இரா.நாகசாமியிடம் தொல்லியல் பயிற்சியும் பெற்று, தொடர்ந்து களப்பணிகள் வழியாகத் தன் பட்டறிவை வளர்த்துக்கொண்டார்.
தமிழக அரசு உ.வே.சா விருதினை 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய போது, முதன்முதலாக அவ்விருதினை திரு.இராசு அவர்களுக்கு அளித்து பெருமைபடுத்தியது. ஆதீனங்கள், தமிழ்ச் சங்கங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் எனப் பல்வேறு அமைப்புகள் திரு.இராசு அவர்களுக்கு இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை அளித்து இவரின் பணிக்கு மணிமகுடம் சேர்த்துள்ளன.